ஜமீன்கள் வழக்கொழிந்து போய் ஜாமீன்கள் செய்திப்பரப்பில் ஆக்கிரமித்திருக்கும் காலம் இது. இந்தச் சூழலில் விநோதமான காரணங்களால் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது சிவகிரி ஜமீன். சுவிஸ் வங்கியில் 165 லட்சம் கோடி ரூபாய் பணம் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கோர்ட்டில் சொல்லப்பட்டது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் புதையலை அடுத்த மலைப்பு! ஜமீன் சொத்துகள் என தரப்பட்டிருக்கும் பட்டியலைப் பார்த்தாலோ, சென்னையில் பாதி சிவகிரிக்குச் சொந்தமா என்ற கேள்வி எழுகிறது. ஸ்பென்சர் பிளாஸா, காஸ்மோபாலிட்டன் கிளப், கேம்ப கோலா வளாகம் என 108 இடங்கள் அந்தப் பட்டியலில் வருகிறது.
எது நிஜம்? சிவகிரி ஜமீனை திடீரென சூழ்ந்திருக்கும் இந்த பரபரப்புக்குக் காரணம் என்ன?
மதுரையிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் வாசுதேவநல்லூருக்கு அருகே இருக்கிறது சிவகிரி. ஜமீனின் மாட மாளிகை முட்புதருக்கு நடுவே இடிந்த கட்டிடமாக இருக்க, அந்தக் காலத்து அன்னதான சத்திரத்தில்தான் தற்போதைய ராணி பாலகுமாரி நாச்சியாரும், வாரிசு விக்னேஷ்வர் ராஜாவும் வாழ்ந்து வருகிறார்கள்.
கி.பி. 13ம் நூற்றாண்டிலிருந்து இந்த ஜமீன் வரலாறு ஆரம்பிக்கிறது. பாண்டிய மன்னர்களின் பிரதிநிதியாக இருந்த இவர்களின் அப்போதைய தலைமையிடம் தென்மலை. தற்போது கூட தென்மலையில் ஒரு அரண்மனை உள்ளது. அதில் சிவகிரி ஜமீனின் உறவுக்காரர்கள் வசிக்கிறார்கள். தொடர்ச்சியான போர்களும் பிரச்னைகளும் ஜமீனை மிகவும் பாதிக்க... தென்மலையிலிருந்து, காட்டுப் பகுதியாக இருந்த சிவகிரிக்கு ஜமீன் மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக வீரத்துடன் போர் புரிந்த வரலாறும் சிவகிரிக்கு உண்டு. 1767ல் ஆட்சி புரிந்த விஜய ரெங்க பாண்டிய வன்னியனும், 1783ல் வீரம்மாள் நாச்சியாரும் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள். நாச்சியாருக்கு இதனால் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்களோடு கூட்டணி வைத்திருந்தார்.
முதலில் எதிர்ப்பு சக்தியாக இருந்த இவர்கள், அதன்பின் ஆங்கிலேயர்களுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டார்கள். முதல் உலகப் போரின்போது சிவகிரி ஜமீனிலிருந்து படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்கள். அப்படிச் சென்றவர்களில் 89 பேர் இறந்து விட்டனர். இதன் நினைவாக தேவிப்பட்டினம் குன்று பகுதியில் ஆங்கிலேயர்கள் நினைவுச் சின்னம் அமைத்துள்ளார்கள்.
1850-ம் ஆண்டு பட்டத்துக்கு வந்த சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத்தம்பியாரும், அவர் மகன் ராமலிங்க வரகுண பாண்டியனும் ஆங்கிலேயர்களுக்கு வரி வசூல் செய்து தருவதில் முன்னணியில் இருந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் எட்டையபுரம் ஜமீனுக்கு அடுத்து பரப்பளவிலும் வருமானத்திலும் பெரிய ஜமீன் சிவகிரிதான். ராமலிங்க வரகுண பாண்டியன் தனது பூட்ஸ் காலுக்குள் தங்க நாணயங்களை நிரப்பிக்கொண்டு குதிரை மீது ஏறி ஊர்வலம் செல்வது வழக்க மாம். அந்த அளவுக்கு செழிப்பான ஜமீன்; செல்வம் குவிந்து காணப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் வைக்கும் விருந்துக்காக அடிக்கடி இவர்கள் வெளிநாடு செல்வதுண்டு. அந்தக் காலத்தில்தான் சுவிஸ் வங்கி தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
ராமலிங்க வரகுண பாண்டியனின் திருமணத்துக்காக தனியாக கல்யாண மண்டபமே கட்டியிருக்கிறார்கள். சிவகிரி பஸ் நிலையம் அருகே இருக்கும் இந்த கல்யாண மண்டபம் கட்ட, இரும்புப் பாளங்கள் இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்துள்ளது; தேக்கு போன்ற மரச்சாமான்கள் சிங்கப்பூரிலிருந்து வந்ததாம். அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த இந்த மண்டபம் எப்போதோ விற்கப்பட்டு விட்டது.
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நான்கு கோயில்கள் உள்ளன. அவரை கூடுபாறை பாலசுப்பிரமணியர் கோயில், தென்மலை ஸ்ரீதிரிபுரநாதர் ஈஸ்வரன் கோயில், வடக்கு சத்திரம் இராமநாத சுவாமி கோயில், சிவகிரி திருநீலகண்ட சுவாமிகள் கோயில் ஆகியவை அவை. கால்நடை மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், பள்ளிக்கூடம் என எங்கே திரும்பினாலும் சிவகிரியில் இவர்கள் இடமாகத்தான் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகவல்லி அணைக்கட்டையும் இவர்கள் கட்டியுள்ளார்கள். 1972ல் இந்த அணையின் ஒரு பகுதி உடைந்து விட்டது. அதைக்கூட தற்போது சீரமைக்க முடியவில்லை.
சிவகிரிக்கு இவர்கள் வந்த பிறகு சங்கிலி வீரப்ப சின்னதம்பியார்தான் முதல் ஜமீன்தார் என்கிறார்கள். அதன்பிறகு செந்தட்டிக்காளை சின்ன தம்பியார். ஜமீன்களின் மூத்த வாரிசுகள் மூலமாக பட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போது பாலகுமாரி நாச்சியார் ராணியாக உள்ளார். இவரது மூத்த மகன்தான் வாரிசுக்கு வரவேண்டும். ஆனால் 1998ல் நடந்த விபத்தில் விசாக விஷ்ணு வர்த்தன் என்ற சின்னதம்பியார் என்ற அந்த மகன் இறந்து விடவே, தற்போது சேவக பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னதம்பியார் ஜமீன் பட்டத்துக்கு வந்துள்ளார். இவர்தான் தற்போது சொத்தை மீட்க அலைந்து வருகிறார். சிவகிரி கோயிலில் இவருக்கு முதல் மரியாதை உண்டு. அந்தக் காலத்திலேயே சாதியை ஒழிக்கப் பாடுபட்டவர்கள் சிவகிரி ஜமீன்கள். எனவேதான் இந்த முதல் மரியாதைக்கு ஜமீனை அரண்மனையில் வந்து அழைத்துச் செல்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் மரபாகக் கொண்டுள்ளார்கள். வழக்கில் சிக்கியது, இழந்தது போக மிச்சம் இருக்கும் சொற்ப நிலங்களில் விவசாயம் செய்வது ஒன்றுதான் ஜமீனின் இப்போதைய வருமானம். இப்படி, மரியாதை தவிர எதுவுமே மிச்சமில்லை என்ற நிலையில்தான் இந்த பரபரப்பும் கிளம்பியிருக்கிறது.
கடந்த நூறு ஆண்டுகளாகவே சிவகிரி ஜமீன் சொத்துகள் தொடர்பாக வழக்குகள் நடந்து வருகிறது. ‘ஜமீனை நிர்வகிக்க முடியவில்லை’ என ஒருவர் போய் அரசிடம் ஒப்படைப்பதும், ‘ஜமீன் உரிமை எங்களுக்கு வேண்டும்’ என இன்னொருவர் வழக்கு போடுவதுமாக இது தொடர்கிறது. ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர்கள் பலரும் இப்படி போட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக இழுபறியில் இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இங்கிலாந்து சென்று வழக்கு நடத்தியவர்களாம் இந்த சிவகிரி ஜமீன்கள்.
‘‘சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீனின் பணம் இருப்பது எங்களுக்குத் தெரியாது’’ என்கிறார் தற்போதைய ஜமீன் விக்னேஷ்வர சின்னதம்பி. அவரது அம்மாவும் ராணியுமான பாலகுமாரி, ‘‘என் கணவரிடம் சொத்து அதிகாரப் பத்திரம் வாங்கியது போல மோசடி செய்து, சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி நடந்திருக்கிறது. இதை எதிர்த்து சட்டப்படி போராடி வருகிறோம். சிவகிரி ஜமீன் சொத்துகள் எங்கெங்கே இருக்கின்றன என்ற தகவல்களும் எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. அரசு தலையிட்டு எங்கள் உரிமையை மீட்டுத் தர வேண்டும்’’ என்கிறார்.
- முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: சுடலை மணி செல்வன்
நன்றி
குங்குமம்
படங்கள்: சுடலை மணி செல்வன்
நன்றி
குங்குமம்